Selections from the Writings of the Báb
Tamil ·
பற்றுறுதி BB00554
பிரபுவே, என் அதி மிகு நேசரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் சமயத்தில் என்னை உறுதியாக ஆக்கிடுவீராக; நான் உமது ஒப்பந்தத்தை மீறாதவர்களுள் ஒருவனாகவும், அவர்களின் சொந்த வீண் கற்பனைகள் எனும் தெய்வங்களைப் பின்பற்றாதவருள் ஒருவனாகவும் கருதப்பட அருள்வீராக. ஆகையால், உமது முன்னிலையில் உண்மை எனும் ஓர் இருக்கையைப் பெற்றிட இயலச் செய்தும், உமது கருணை எனும் ஒரு சின்னத்தையும் எனக்குத் தந்தருள்வீராக; மேலும் அச்சமற்றோரும், துயருக்கு ஆளாகிடாதோருமாகிய உமது ஊழியர்களோடு என்னை ஒன்றிணையச் செய்வீராக.
என் பிரபுவே, என்னை என்னிடமே கைவிட்டு விடாதீர்; அன்றியும், உமது சொந்தத் தன்மையின் அவதாரமானவரை அறிவதிலிருந்து என்னை இழக்கச் செய்திடாதீர்; அல்லது உமது புனித முன்னிலையிலிருந்து விலகிச் சென்றோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டு விடாதீர். என் கடவுளே, உந்தன் அழகின்பால் அவர்களது பார்வையைப் பதித்திடும் சலுகையைப் பெற்றவர்களுள் ஒருவனாகவும்; அதனில் அவர்கள் எத்துணை இன்பத்தைப் பெறுபவர்களாக இருக்கின்றார்கள் என்றால், விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய இராஜ்யங்களின் அரசாட்சிக்காகவோ, படைப்பெனும் இராஜ்யம் அனைத்திற்காகவோ, ஒரு கணநேரத்தைக்கூட பரிமாற்றம் செய்யாதிருப்போர்களாக இருக்கின்ற அவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொள்வீராக. என் பிரபுவே, உமது உலகின் மக்கள் கொடூரமாகத் தவறிழைத்துள்ள இந்நாள்களில் என் மீது கருணைக் காட்டுவீராக; எனவே, என் கடவுளே, உந்தன் மதிப்பீட்டில் நன்மையானதையும், தகுந்ததையும் எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, சர்வ சக்திமிக்கவரும், கிருபையாளரும், கொடைவள்ளலும், என்றும் மன்னிப்பவரும் நீரே ஆவீர்.
என் கடவுளே, செவிகள் கேளாமலும், கண்கள் குருடாகவும், நாவுகள் பேசவியலாமலும், இதயங்கள் புரிந்துகொள்ள இயலாமலும் உள்ளவர்களுள் ஒருவனாக நான் கருதப்-படாதிருக்க எனக்கு அருள்வீராக. பிரபுவே, அறியாமை, சுயநல ஆசை ஆகிய தீயிலிருந்து என்னை மீட்பீராக; உமது தலையாயக் கருணையின் சூழிடங்களுக்குள் என்னை நுழைந்திடச் செய்தும், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை என் மீதும் பொழிந்திடுவீராக. நீர் விரும்பியதைச் செய்திடச் சக்தி படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் நீரே ஆவீர்.
மன்னிப்பு BB00593
கடவுளே எங்கள் பிரபுவே! உமக்கு ஒவ்வாததாயிருக்கின்ற எதனிலிருந்தும், உமது கிருபையைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; நீர் நன்கு ஏற்கின்றவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமது அருட்கொடைகளிலிருந்து எங்களுக்கு அதிகமாக வழங்கி, எங்களை ஆசீர்வதிப்பீராக. நாங்கள் செய்துள்ள காரியங்களுக்காக எங்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களைக் கழுவிடுவீராக, உமது கருணைமிகு மன்னிக்கும் தன்மையைக் கொண்டு எங்களை மன்னிப்பீராக.
உமது அன்புமிகு திருவருளானது, விண்ணிலும் மண்ணிலும் உள்ள படைப்புப் பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது; மேலும் உமது மன்னிக்கும் தன்மை, படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ளது. இறையாண்மை உமக்கே உரியது; படைப்பு, திருவெளிப்பாடு ஆகிய இராஜ்யங்கள், உமது அதிகாரத்திற்கு உட்பட்டவை; உம்மால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களையும் நீர் வலக் கரத்தில் பிடித்துக்கொண்டுள்ளீர்; நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின் படி மன்னிப்பானது உமது பிடிக்குள் அடங்கியுள்ளது. நீர் விரும்பியவாறு உமது ஊழியர்களுள் எவர் ஒருவரையும் நீர் மன்னித்தருள்வீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், சர்வ அன்பானவரும் நீரே ஆவீர். உமது அறிவிலிருந்து எதுவும் தப்பிவிடுவதில்லை; மேலும் உம்மிடமிருந்து மறைந்துள்ளவை எதுவுமே இல்லை.
கடவுளே எங்கள் பிரபுவே! உமது வல்லமையின் சக்தியைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; அற்புதமாகப், பொங்கி எழும் உமது சமுத்திரத்திற்குள், எங்களை நுழைந்திடும்படி செய்து, உமக்குப் பொருத்தமானவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக.
இறைமைமிக்க ஆட்சியாளரும், வலியதைச் செய்பவரும், மென்மையானவரும், அதி அன்பானவரும் நீரே ஆவீர்.
மன்னிப்பு BB00617
பிரபுவே, உமது முன்னிலையில் அத்துமீறிய என் செயல்கள் என் முகத்தை வெட்கத்தால் மூடி மறைத்துள்ளன என்பதையும், உம் முன்னே எனக்குச் சுமையாகவும் ஆகியுள்ளன என்பதையும், எனக்கும் உமது அழகிய வதனத்திற்கும் இடையே குறுக்கிட்டுள்ளன என்பதையும், எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைச் சூழ்ந்துள்ளன என்பதையும், உமது விண்ணுலகச் சக்தியின் வெளிப்பாடுகளை அடைவதிலிருந்து எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைத் தடுத்துள்ளன என்பதையும் நான் உணர்கின்றேன்.
பிரபுவே! நீர் என்னை மன்னிக்காவிடில், மன்னிப்பு வழங்குவதற்கு வேறு எவருளர்; என் மீது நீர் கருணை காட்டாவிடில், இரக்கப்படுவதற்கு வேறு யாரால் இயலும்? புகழ் உமக்கே உரியதாகுக; இல்லா நிலையில் நான் இருந்தபோதும் நீர் என்னைப் படைத்துள்ளீர்; எனக்கு எவ்வித புரிந்துணர்வும் இல்லாத நிலையிலும் நீர் என்னைப் பேணியுள்ளீர். அருட்கொடைக்கான ஒவ்வோர் ஆதாரமும் உம்மிடமிருந்தே தோன்றுகின்றது என்பதற்காகவும்; கிருபை எனும் ஒவ்வொரு சின்னமும் உமது கட்டளை எனும் கருவூலங்களிலிருந்து வெளிப்படுகின்றது என்பதற்காகவும், உமக்கே புகழெல்லாம் சேரட்டுமாக.
சோதனைகளும் இன்னல்களும் BB00623
இன்னல் தீர்ப்போன் இறைவனன்றி யாருளர்? சொல்: இறைவனே போற்றி! அவரே கடவுள்! யாவரும் அவர் ஊழியர், யாவரும் அவர் சொற் பணிவர்!
— பாப் பெருமானார்
என் கடவுளே, எல்லாத் திசைகளிலிருந்தும் என் மீது துன்பங்கள் பொழிந்துள்ளதையும், அத்துடன், அவற்றை நீக்கவோ, மாற்றவோ உம்மைத் தவிர வேறு எவருக்கும் இயலாது என்பதையும் நீர் நன்கு அறிவீர். உமது மண்ணுலக வாழ்க்கையில் ஓர் ஆன்மாவின் ஸ்தானத்தை, வலிந்தீர்க்கவல்ல உமது சக்தியினைக் கொண்டு மேன்மைப் படுத்த வேண்டுமென்றும், இவ்வுலகின் வீண் பகட்டுகளின்பால் அவ்வான்மாவின் மனம் சென்றிடாதிருக்க வேண்டுமென்றும் நீர் விரும்பினாலன்றி, எந்த ஓர் ஆன்மாவுக்கும் நீர் கொடுந்துன்பங்கள் விளைவிக்க மாட்டீர் என்று, உம் மீதுள்ள எனதன்பின் காரணமாக, நிச்சயமாகத் எனக்குத் தெரியும். உண்மையாகவே, எல்லாச் சூழல்களிலும் விண்ணுலகங்களிலும் மண்ணு-லகிலுமுள்ள அனைத்தையும் நான் உடைமையாகக் கொள்வதை விட, உந்தன் நினைவையே மேலாக விரும்பிடுவேன் என்பதை, நீர், நன்கு அறிந்திருக்கின்றீர்.
என் கடவுளே, உமக்குக் கீழ்ப்படிதலிலும் உமதன்பிலும் என் இதயத்தைப் பலப்படுத்தி, உமது பகைவர்களின் கூட்டத்தினிடமிருந்து நான் முற்றாக விலகியிருக்கும் நிலையினை, எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, உமது ஒளியின் மீது ஆணை இடுகின்றேன்; உம்மைத் தவிர வேறெதனையும் நான் விரும்வில்லை; உமது கருணையைத் தவிர வேறெதனையும் நான் விழைவதில்லை; உமது நீதியைத் தவிர வேறெதன்பாலும் நான் அச்சம் கொள்வதில்லை; என்னையும் மற்றும் நீர் நேசிப்போரையும் உமது விருப்பத்திற்கேற்ப மன்னித்தருளுமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், வள்ளன்மை மிக்கவர்.
விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகியவற்றின் அதிபதியே, எல்லா மனிதர்களின் புகழ்ச்சிக்கும் மேலாக வரம்பின்றி உயர்த்தப்பட்டிருப்பவர் நீரே, உமது உண்மை ஊழியர்களின் மீது அமைதி நிலவுமாக; எல்லா உலகங்களின் பிரபுவாகிய இறைவனுக்கே ஒளி உரியதாகுக.